

சென்னை,
அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று தஞ்சையில் த.வெ.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சர் குறித்தும், பெண்கள் குறித்தும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தமிழக பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி!
பேரறிஞர் அண்ணா தனது தமிழ் புலமையால் கட்டியெழுப்பிய இயக்கத்தை, இன்று தனது ஆபாச மொழியாலும் இரட்டை அர்த்தப் பேச்சுக்களாலும் அழித்து வருகிறார் 'ஆபாச'நிதி.
தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராய்கூட அல்ல, அடிப்படை மனித மாண்புகூட கொஞ்சமும் இல்லாமல், தரங்கெட்டத்தனமாக மேடையில் பேசியிருக்கிறார். அண்ணா உருவாக்கிய அறிவாலயமான திமுக-வை ஆபாசத்தின் அடையாளமாக மாற்றிவிட்ட ஆபாசநிதி.
பெண்கள் பற்றி அவர் கொண்டிருக்கும் வக்கிர சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக இன்று அவர் பேசியுள்ள ஆபாசப் பேச்சு கேட்பவர்களைக் காது கூசச் செய்கிறது. இதுபோன்ற இழிவான பேச்சுகளை தமிழ்நாட்டின் எந்தவொரு தாய்மார்களும், அக்கா - தங்கைகளும், பெற்றோர்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
இதுபோன்ற நபர்களின் ஆதிக்க சிந்தனையால்தான் தி.மு.க.வை இந்த தேர்தலில் தமிழ்நாட்டுப் பெண்கள் தூக்கியெறிந்தார்கள். ஆனால் இப்போது, பொது மேடைகளிலேயே தனது குரூர எண்ணத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் ஆபாசநிதியை தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியலிலிருந்தே துடைத்தெறிவார்கள் தமிழ்நாட்டின் தாய்மார்களும், பெண்களும்!
ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்!.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.