80 வயதானவர்களுக்கு தபால் ஓட்டு - தமிழக சட்டசபை தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை

80 வயதை கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போட வாய்ப்பு அளிக்கப்படும் என்று தமிழக சட்டசபை தேர்தல் குறித்து சென்னையில் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.
80 வயதானவர்களுக்கு தபால் ஓட்டு - தமிழக சட்டசபை தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை
Published on

சென்னை,

தமிழகத்தில் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் முன்ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

அதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையில் தேர்தல் துணை ஆணையர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஸ் குந்த்ரா, பீகார் தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீநிவாசா, தேர்தல் ஆணைய இயக்குநர் பங்கஞ் ஸ்ரீவத்சா, செயலாளர் மலாய் மாலிக் ஆகியோர் நேற்று முன்தினம் சென்னைக்கு வந்தனர்.

கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவர்கள் நேற்று முன்தினம் காலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் சூப்பிரண்டுகள், வருமான வரித்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் நேற்று காலையில் தமிழக அரசின் உயர் அதிகாரிகளான தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் அரசு துறை செயலாளர்கள், டி.ஜி.பி. உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த கூட்டம் முடிந்ததும் நிருபர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைவரும் பங்கேற்கும் வகையிலும், நியாயமான முறையிலும் தேர்தலை நடத்தும் நோக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பை அளிக் கும் புதிய பணியையும் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

கொரோனா காலகட்டத்தில் பொது தேர்தல்கள், இடைத்தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம். அடுத்த தேர்தலை நடத்துவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே பணிகளை தொடங்கிவிட்டோம்.

நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தலை நடத்துவதோடு, வாக்காளர்கள் அனைவருக்குமே பாதுகாப்பு அளிப்பதையும் முக்கியமாக கருதுகிறோம். தகுதியுள்ள அனைவருமே வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும்.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டாலும், மீண்டும் பட்டியலில் பெயரை சேர்க்க, திருத்த வாய்ப்பு அளிக்கப்படும். சிறப்பு முகாம்களும் நடத்தப்படும். இடம் பெயர்ந்து மறுகுடியமர்வுக்கு சென்றவர்களையும் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்பட்டால் அவர்களை அணுகி உதவிகள் செய்யப்படும். 1950 என்ற எண் மூலம் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது பற்றி தெரிந்துகொள்ளலாம்.

வாக்குச்சாவடிகளிலும் சாய்தளம், சக்கர நாற்காலிகள் போன்றவை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர இருக்கிறோம். வெயில் காலம் என்பதால் வாக்களிக்க வந்துள்ளவர்கள் காத்திருப்பதற்கு கூடார வசதி செய்து தரப்படும். மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் போன்றவை தயாராக இருக்கும்.

80 வயதை கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுகளைப் பெறலாம். இதுதொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சில அரசியல் கட்சிகள் இதில் சந்தேகங்களை எழுப்பின. இதில் வாக்கு ரகசியம் காக்கப்படுமா? என்பதில் சந்தேகம் உள்ளது.

இதுதொடர்பான நடைமுறை அறிவிக்கப்படும். வாக்குச்சாவடி அதிகாரிகள் அவர்களின் வசிப்பிடத்திற்கு செல்வார்கள். அது நடமாடும் வாக்குச்சாவடி போல செயல்படும். அவர்கள் வீட்டில் இருந்தபடி வாக்கு செலுத்தலாம். இதை அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கண்காணிக்கலாம்.

எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரங்கள், விவிபேட் எந்திரங்கள் (ஓட்டு பதிவை உறுதி செய்யும் எந்திரம்) ஆகியவற்றை தயார்படுத்தும் பணிகள் நடக்கின்றன. வரும் ஜனவரி 31-ந் தேதிக்குள் இந்த பணிகள் நிறைவடையும். இதுபற்றிய தகவல்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும்.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும் கொரோனா தடுப்பு தொடர்பான வழிகாட்டிகள் பின்பற்றப்படும். கொரோனா தொற்றில்லாமல் தேர்தலை நடத்தி இருக்கும் அனுபவங்கள் இங்கு பின்பற்றப்படும். இதுபற்றி பீகார் தலைமை தேர்தல் அதிகாரி, தமிழக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில் எப்போதுமே அமைதியாக தேர்தல் நடக்கிறது. இருந்தாலும், பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், பிரச்சினை எழக்கூடிய பகுதிகள், நலிந்த சமுதாயத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆகியவற்றை அடையாளம் காண அறிவுறுத்தியுள்ளோம். அதன் அடிப்படையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் அடையாளம் காணப்படும்.

தமிழகத்தில் தேர்தல் செலவீனங்கள் தொடர்பான பிரச்சினைகள் உண்டு. இதற்காக இந்த தேர்தலில் ஒரு ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்தப்படும். தேர்தல் சுதந்திரமாக நடைபெறுவதற்கு தேவையான கண்காணிப்பு உன்னிப்பாக செயல்படுத்தப்படும்.

அதற்கான நெட்வொர்க் பற்றி மத்திய மற்றும் மாநில அமலாக்க அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஓட்டுக்காக மதுபானம், பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவது, டிஜிட்டல் முறையில் பட்டுவாடா செய்வது போன்றவை தடுக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் இரும்புக்கரம் கொண்டு தடுக்கும்.

இதுதொடர்பாக நல்ல விழிப்புணர்வை வாக்காளர்களிடம் ஏற்படுத்தும்படி தலைமை தேர்தல் அதிகாரியிடம் கூறியிருக்கிறேன். இதுவரை நடந்துள்ள தயார்நிலை பணிகள் திருப்தி அளிக்கின்றன. ஒவ்வொரு நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் ஆய்வுக்கு உட்படுத்தும் என்று உமேஷ் சின்ஹா கூறினார்.

அதைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

தமிழக சட்டசபையின் காலம் வரும் மே 24-ந் தேதி முடிகிறது. தற்போது நாங்கள் பெற்றுள்ள கருத்துகளை இந்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்போம். முன்கூட்டியே தேர்தலை நடத்துவது, தேர்தல் தேதி முடிவு செய்வதை ஆணையம் மேற்கொள்ளும்.

ஒரே கட்டமாக தேர்தலை நடத்துவதற்கு பல கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இதுபற்றியும் ஆணையத்துக்கு தகவல் தரப்படும். பணப்பட்டுவாடாவுக்கு எதிராக, கண்காணிப்பு குழு, பறக்கும் படை, வருமான வரித்துறை மூலம் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

மக்களும் இதை கண்காணிக்கும் பொறுப்பில் உள்ளனர். பணப்பட்டுவாடாவுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள சிவிஜில் செல்போன் செயலி வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

80 வயது கடந்தவர்களுக்கு தபால் ஓட்டுகள் அளிப்பது ஒரு நல்ல திட்டமாகும். அது கட்டாயமல்ல. வாக்களிப்பதற்கு வாய்ப்பாக தரப்படுகிறது. அதை யாரும் எதிர்ப்பதாக தெரியவில்லை. வெளிவர முடியாத அளவுக்கு உடல்நிலை சரியில்லாதவர்களை வாக்குச்சாவடிகளுக்கு கட்டாயப்படுத்து வரவழைப்பது சரியானதல்ல. எனவே அவர்களும் தேர்தலில் பங்கேற்க இதுபோன்ற சிறப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுள்ளவர்களிடம் இருந்து முன்னரே விண்ணப்பம் பெறப்பட்டு தபால் ஓட்டுகள் வழங்கப்படும். வாக்களிக்கும் கடைசி நேரத்தில் அவர்களுக்கு வாக்களிக்க வசதிகள் செய்துதரப்படும். இதில் இதுவரை நடத்திய தேர்தலில் பெற்ற அனுபவங் களை செயல்படுத்துவோம்.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அரசு அதிகாரிகளை தேர்தல் காலத்தில் அங்கிருந்து வேறிடத்திற்கு மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் இருக்கும் வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு, வாய்ப்பிருந்தால் அதே வளாகத்தில் அல்லது அருகேயுள்ள கட்டிடத்தில் மற்றொரு வாக்குச்சாவடி அமைக்கப்படும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

வேட்பாளர்களின் தேர்தல் செலவு உச்சவரம்பு, கொரோனா காலகட்டத்தில் 10 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதை உயர்த்துவது பற்றி குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் அந்த குழு அறிக்கை தாக்கல் செய்கிறது. அதுவரை பொறுத்திருக்க வேண்டும்.

தவறுகள் இல்லாத வாக்காளர் பட்டியலுடன் 2021-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்படும். இதுதொடர்பாக அரசியல் கட்சி முகவர்கள் கூறும் குறைகள் களையப்படும். தவறுதலாக பெயர்கள் நீக்கப்படாது என்று அவர் பதில் அளித்தார்.

முன்னதாக, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் விரிவுரை அறிக்கை, வாக்காளர் விழிப்புணர்வு குறுந்தகடு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், விவிபேட் விளக்க கையேடு ஆகியவற்றை இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பங்கேற்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com