சென்னையில் இரவில் தொடரும் மின்வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை வாசிகள் வியர்வை, புழுக்கம் மற்றும் கொசுக்கடி என மும்முனை தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் இரவில் தொடரும் மின்வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்
Published on

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் மின்வெட்டு தூக்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் இந்த மின்வெட்டு இரவு நேரங்களில் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. பல மணிநேர மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். சில இடங்களில் மின்வாரிய அலுவலகங்கள் முற்றுகையிடப்படுகின்றன.

இந்த நிலையில் இன்று நள்ளிரவில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுகாடு அருகே கரிகாட்டு குப்பம் பகுதியில் 3 மணி நேரத்திற்கு மேலாக நள்ளிரவில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் கொந்தளித்து போன பொதுமக்கள் 150-க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைபோல செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் சுமார் 3 மணி நேரமாக மின்வெட்டு நீடித்ததால் மின்சார அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த 10 நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகக் குற்றச்சாட்டினர். பெரம்பூர் தொகுதியில் மின்வெட்டைக் கண்டித்து இரவில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

பொன்னேரி ஆரணியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மின்வெட்டைக் கண்டித்து, நள்ளிரவில் சாலை மறியலில் மக்கள் ஈடுபட்டனர். அண்மைக்காலமாக இரவு நேரங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்படுவதாகக் குற்றச்சாட்டியுள்ளனர்.

சென்னைவாசிகள் கடந்த சில நாட்களாகவே வியர்வை, புழுக்கம் மற்றும் கொசுக்கடி என மும்முனை தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் பலருடைய தூக்கம் காணாமல் போய்விட்டது. மின்வெட்டு தொடர்ந்து வருவதால் மின்சார வாரிய உதவி எண்கள் எப்போதும் 'பிஸி'யாகவே உள் ளன. அதில் புகார் தெரிவித்தாலும் உடனடியாக தீர்த்து வைக்கப்படுவதும் இல்லை.

சென்னையில் பல்வேறு இடங்களிலும் மின்வெட்டு மக்களை பாடாய்படுத்துகிறது. இரவு நேரம் வந்தாலே மக்கள் மின்வெட்டை நினைத்து பதற்றம் அடையத் தொடங்கிவிடுகிறார்கள். தூக்கம் கலைவதால் பலரும் மன அழுத்தத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் மின்வாரியத்தை பலரும் திட்டி தங்களுடைய ஆதங்கத்தை தீர்த்துக்கொள்கிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com