

நெல்லை,
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் ரஷிய நாட்டின் நிதி உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, முதலாவது அணு உலையின் கண்டன்சர் குளிரூட்டும் நீர் இறைப்பானில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த 26-ந்தேதி மின் உற்பத்தி திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் பழுதை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில், தற்போது தொழில்நுட்பக்கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில், முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது.
இரண்டு அணு உலைகளில் இருந்தும் தமிழகத்திற்கு 1,152 மெகா வாட் மின் உற்பத்தி கிடைக்கிறது. தற்போது 3-வது அணு உலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, மின் உற்பத்தி தொடங்குவதற்கான பிரதான பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.