துணை ஜனாதிபதி வருகையின் போது மின்தடை: ஒருவர் பணியிடை நீக்கம்

பொற்றாமரை குளத்தின் அருகில் நின்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
துணை ஜனாதிபதி வருகையின் போது மின்தடை: ஒருவர் பணியிடை நீக்கம்
Published on: 

மதுரை,

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நேற்று முன்தினம் மாலை 5.30 மணி அளவில் வந்தார். அவருடன் தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், அமைச்சர் ஜெகதீசுவரி, கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா உள்பட பலரும் வந்திருந்தனர். கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனி வேல்ராஜன், கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் வரவேற்றனர்.

பூரண கும்ப மரியாதை அளித்து துணை ஜனாதிபதியை கோவிலுக்குள் அழைத்து சென்றனர். அங்கு மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதியில் சிறப்பு அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனும், கவர்னர் அர்லேகரும் தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் பொற்றாமரை குளத்தின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், கோவி லுக்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கோவிலில் திடீரென மின்சாரம் தடைபட்டது. சிறிது நேரத்தில் மின்சாரம் வந்தாலும், 2 முறை மின்தடை ஏற்பட்டு சீராகியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறும்போது, துணை ஜனாதிபதி தரிசனத்தின்போது மின்தடை ஏற்பட்டுவிடாமல் இருக்க மின்சாரம் இருந்தாலும், கோவிலில் ஜெனரேட்டர் மூலம் மின்வினியோகம் வழங்கப்பட்டது. துணை ஜனாதிபதி வெளியே சென்ற பிறகு ஜெனரேட்டரை ஆப் செய்துவிட்டு வழக்கமான மின்சாரத்திற்கு மாற்றும்போது மின்தடை ஏற்பட் டது. சில நொடிகளில் மின்சாரம் வந்து விட்டது என்றனர்.

இந்த நிலையில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையின்போது மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மின்தடை ஏற்பட்ட விவகாரத்தில் இளநிலை பொறியாளர் ஜானகிராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பணியில் கவனக்குறைவாக செயல்பட்டது குறித்து 15 நாட்களில் விளக்கம் அளிக்க ஜானகிராமனுக்கு கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி உத்தரவிட்டுள்ளார்.

X