தங்கக் கம்மலை நேர்மையாக ஒப்படைத்த சிறுமிக்கு பாராட்டு; அசைவ விருந்து கொடுத்து கவுரவிப்பு

தென்காசியில் வெங்கடம்பட்டி ஆலமரத்தடி சுடலைமாடன் சுவாமி கோவில் கொடை விழாவில் பங்கேற்ற 6-ம் வகுப்பு படிக்கும் சிறுமி தீபிகா, அங்கு தவறி விழுந்த மற்றொரு நபரின் தங்கக் கம்மல் ஒன்றை கண்டெடுத்துள்ளார்.
தங்கக் கம்மலை நேர்மையாக ஒப்படைத்த சிறுமி; அசைவ விருந்து வைத்து கவுரவிப்பு.
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட தங்கக் கம்மலை உரியவரிடம் நேர்மையாக ஒப்படைத்த 6-ம் வகுப்பு படிக்கும் சிறுமி தீபிகாவிற்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தங்கக் கம்மலை உரியவரிடம் நேர்மையுடன் ஒப்படைத்த சிறுமி

தென்காசி மாவட்டம், வெங்கடம்பட்டி ஆலமரத்தடி சுடலைமாடன் சுவாமி கோவில் கொடை விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற 6-ம் வகுப்பு படிக்கும் சிறுமி தீபிகா, அங்கு தவறி விழுந்த மற்றொரு நபரின் தங்கக் கம்மல் ஒன்றை கண்டெடுத்தார். பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல், அந்த தங்கக் கம்மலை உரியவரிடம் நேர்மையுடன் ஒப்படைத்தார்.

சிறுமிக்கு பாராட்டு

சிறுமியின் இந்த நேர்மையான செயலைப் பாராட்டி சால்வைகள், ரொக்கப் பரிசுகள், கேடயங்கள் வழங்கி சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் நேரில் சென்று பாராட்டி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, ஆலங்குளத்தைச் சேர்ந்த ஒரு பிரியாணி ஓட்டல் உரிமையாளர் சாம்பவர் வடகரை ஹரிஹர செல்வன், சிறுமி தீபிகா, அவரது தாய் ஜெயந்தி, தந்தை திரவியக்கனி மற்றும் அவரது சகோதரனை ஆலங்குளத்திற்கு நேரில் வரவழைத்தார்.

அசைவ விருந்து

அவர்களை அன்போடு வரவேற்ற அந்த பிரியாணி கடை நிர்வாகம், அந்த சிறுமியின் குடும்பத்தினர் அனைவருக்கும் பிரியாணி, சிக்கன் உள்ளிட்ட சுவையான அசைவ விருந்து அளித்து உபசரித்தது. மேலும் அந்த பிரியாணி ஓட்டல் அதிபர் ஹரி, சிறுமிக்கு ஐஸ்கிரீம் வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்வில் சமூக சேவகர் வெங்காடம்பட்டி திருமாறன், இன்ஜினியர் பார்த்திபன், மணியன் ஆகியோர் உடனிருந்து சிறுமியை வாழ்த்தினர்.

நேர்மையான குணத்திற்கும், சத்திய வாழ்விற்கும் சமூகத்தில் எப்போதும் நல்மதிப்பு கிடைக்கும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பிறர் பொருளுக்கு ஆசைப்படாத இந்தச் சிறுமியைப் போல தங்கள் குழந்தைகளையும் வளர்க்க வேண்டும் என பெற்றோர்கள் விரும்புகின்றனர். மேலும் இந்த சிறுமியின் நேர்மை குறித்த தகவல் நடிகர் ரஜினிகாந்தின் பார்வைக்கும் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com