முன்விரோதம்: வாலிபரின் தாயார் உள்பட 3 பேருக்கு சரமாரி கத்திக்குத்து - 5 பேர் கைது

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
முன்விரோதம்: வாலிபரின் தாயார் உள்பட 3 பேருக்கு சரமாரி கத்திக்குத்து - 5 பேர் கைது
Published on

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை பவானி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் அரி பிரசாத் மற்றும் தீபக். இவர்களுக்கும், அதே தெருவை சேர்ந்த பிரவீன் பெஞ்சமின், அஜித்குமார், சிவகுமார், ஜான்சன், பிரசாந்த் ஆகியோருக்கும் இடையே 6 மாதத்துக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கடையில் ஜூஸ் குடித்தபோதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இரவு 11 மணி அளவில் பிரவீன் பெஞ்சமின் உள்பட 5 பேரும் அரி பிரசாத்தை தேடி அவரது வீட்டுக்கு சென்றனர்.

அப்போது வீட்டு வாசலில் அரி பிரசாத்தின் தாயார் பழனியம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் வினோத்குமார் (34), கோதண்டபாணி (48) ஆகியோர் பேசிக்கொண்டு இருந்தனர். அவர்களிடம் அரி பிரசாத் எங்கே? என்று கேட்டு தகராறு செய்தனர்.

பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பழனியம்மாள் உள்பட 3 பேரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிரவீன் பெஞ்சமின், அஜித்குமார், சிவகுமார், ஜான்சன், பிரசாந்த் ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com