

சென்னை,
தமிழகத்தில் விண்ணைத் தொடும் அத்தியாவசியப் பொருட்களின் விலை: ஜோசப் விஜய் அரசின் திறனற்ற நிர்வாகமே காரணம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
ஜோசப் விஜய்யின் ஆட்சியில் தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையை கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. குறிப்பாகத் தலைநகர் சென்னையில், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தேசிய சராசரியை விடப் பல மடங்கு அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தேசிய அளவில் ஒரு கிலோ அரிசியின் சராசரி விலை ரூ.48.12 ஆக இருக்கும்போது சென்னையில் ரூ.80-க்கும், தேசிய சராசரி வெறும் ரூ.22.69 மட்டுமே உள்ள உருளைக்கிழங்கு சென்னையில் ரூ.8-க்கும், வெங்காயம் ரூ.68 வரையிலும் விற்கப்பட்டு சாமானிய மக்களின் அடுப்பங்கரையை முடக்கியுள்ளது; இதனால் ஏழைத் தாய்மார்கள் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
மக்களை வாட்டி வதைக்கும் இந்த விபரீத விலைவாசி உயர்வு குறித்துப் பேசுவதற்கோ அல்லது அதற்குத் தீர்வு காண்பதற்கோ முதல்-அமைச்சர் விஜய்க்கு எவ்வித நிர்வாக அறிவோ, பொருளாதாரப் புரிதலோ இல்லை என்பது இதன் மூலம் அப்பட்டமாகத் தெரிகிறது. பணவீக்கம், சந்தைக் கட்டுப்பாடு, விநியோகச் சங்கிலி முறை போன்ற அடிப்படை மக்கள் நலக் கொள்கைகளில் குறைந்தபட்ச நிலைப்பாட்டைக் கூட எடுக்க முடியாத அவரது அரசியல் மற்றும் நிர்வாகத் திறனின்மை வெட்டவெளிச்சமாகியுள்ளது.
மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புறந்தள்ளிவிட்டு, தனது பிம்பத்தைக் கட்டமைப்பதிலும் தனக்குத் தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்வதிலும் மட்டுமே குறியாக இருக்கிறார் ஜோசப் விஜய். எனவே, இனியாவது மக்களின் துயரத்தை உணர்ந்து, விலைவாசி உயர்வால் பாதிக்கப்படும் மக்களைக் காக்கும் பொருட்டு, அத்தியாவசியப் பொருட்களைக் கட்டுப்படியாகும் விலையில் கொண்டு சேர்ப்பதற்கான திட்டத்தைத் தயார் செய்வதோடு, வருங்காலத்தைக் கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் தவெக அரசு ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
"மின்சாரத்தைத் தொட்டால்தான் ஷாக் அடிக்கும், தவெக ஆட்சியில் விலைவாசி உயர்வைப் பார்த்தாலே ஷாக் அடிக்குது!"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.