

சென்னை,
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணி மத்தியில் அரசு அமைத்துள்ளது. மோடி 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். பிரதமராக பொறுப்பேற்றதும் பிரதமர் மோடி முதல் பயணமாக ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ளார்.
இந்த நிலையில், வருகிற 20-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் வரையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக பிரதமர் மோடி சென்னை வர உள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததும் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி முதல் முறையாக சென்னை வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.