பிரதமரின் கட்டுப்பாடுகள், அறிவுரைகள் மக்களை பதற்றமடைய செய்கிறது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்டோர், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, மக்களுக்கு மட்டுமே தொடர்ந்து கட்டுப்பாடுகளையும், அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
பிரதமரின் கட்டுப்பாடுகள், அறிவுரைகள் மக்களை பதற்றமடைய செய்கிறது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
Published on

திருநெல்வேலி,

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நெல்லையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டார். முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த அவர் தற்போதைய மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:

தற்போது சமையல் கியாஸ் சிலிண்டர் கிடைப்பதே சாதாரண மக்களுக்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதனால் அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய இக்கட்டான சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. ஒட்டுமொத்தமாக நாம் ஒரு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்.

பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் பாரத பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்டோர், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, மக்களுக்கு மட்டுமே தொடர்ந்து கட்டுப்பாடுகளையும், அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள். மக்களை எப்போதும் ஒருவித பதற்றத்திலேயே வைத்திருக்கக்கூடிய விஷயங்களைத்தான் அவர்கள் பேசி வருகிறார்கள். குறிப்பாக, பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது, அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் தங்களது எதிர்காலம் குறித்த அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சுருக்கமாகப் பதிலளித்த கனிமொழி எம்.பி., "இப்போதுதான் அவர்கள் முறைப்படி பொறுப்பேற்றுள்ளார்கள்" என்று மட்டும் கூறி விடைபெற்றார்.

இந்த நிகழ்வின்போது நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ., நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் மைதீன்கான், முன்னாள் மேயர் சரவணன் மற்றும் வர்த்தக அணி மாநில இணைச் செயலாளர் மாலை ராஜா உள்ளிட்ட முக்கிய தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com