கைதிகள் தப்பிஓடிய விவகாரம்: சேலம் சிறை கைதிகள் நடத்தி வந்த பெட்ரோல் பங்க் மூடல்

கூடுதல் பாதுகாப்பு பணியில் சிறைக்காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கைதிகள் தப்பிஓடிய விவகாரம்: சேலம் சிறை கைதிகள் நடத்தி வந்த பெட்ரோல் பங்க் மூடல்
Published on: 

சேலம்,

தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 17 கைதிகள் கடந்த 26-ந் தேதி இரவு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் தப்பி ஓடிய அனைத்து கைதிகளையும் போலீசார் விரைந்து பிடித்து மீண்டும் பல்வேறு சிறைகளில் அடைத்தனர்.

இதுபோன்ற சம்பவங் கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அனைத்து சிறைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு சிறைத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்படி, சேலம் மத்திய சிறையிலும் வழக்கத்தைவிட கூடுதல் பாதுகாப்பு பணியில் சிறைக்காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சிறையின் நுழைவு வாயில் முன்பு 2 போலீசார் துப்பாக்கி ஏந்தியவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, அஸ்தம்பட்டி பகுதியில் நன்னடத்தை சிறை கைதிகள் சார்பில் ஏற்கனவே 2 இடங்களில் கோழி இறைச்சி விற்பனை கடைகளும், ஒரு பெட்ரோல் பங்க் நடத்தப்பட்டு வந்தது. இங்கு சுமார் 19 கைதிகள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்கிற்கு வாகன ஓட்டிகளும் ஆதரவு தெரிவித்து தினமும் அங்கு சென்று தங்களது வாகனங்களுக்கு தேவையான டீசல், பெட் ரோலை நிரப்பி சென்றனர். இதனால் சிறை கைதிகள் நடத்தி வரும் பெட்ரோல் பங்க்கிற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

ஆனால் தேனி மற்றும் கோவையில் கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடிய சம்பவத்தை தொடர்ந்து சேலம் மத்திய சிறை நிர்வாகம் சார்பில் கைதிகளால் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்க் நேற்று முதல் மூடப்பட்டது. அதேபோல் சிறை பகுதியிலும், அஸ்தம்பட்டி முனியப்பன் கோவில் வளாகத்திலும் கைதிகள் மூலம் இயங்கி வந்த கோழி இறைச்சி கடைகளும் நேற்று முதல் அடைக்கப்பட்டன.

இதனால் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்கு வந்த வாகன ஓட்டி கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிறைத்துறை சார்பில் மறு உத்தரவு வரும் வரை சேலத்தில் சிறை கைதிகளால் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்க் மற்றும் கோழி இறைச்சி கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்றும், அதன்பிறகு அனுமதி அளித்தால் மட்டுமே அவை மீண்டும் திறக்கப்படும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

X