

சென்னை,
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தொடர்ந்து கைதிகள் தொடர்ந்து தப்பி ஓடும் பிரச்சினை தமிழக மக்கள் இடத்தில் அச்சத்தை ஏற்படுத்துவதுடன் தொழில் முனைவோர்கள் தமிழகத்தை மறக்கும் நிலையை ஏற்படுத்தும். இது தொடர்பாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
புழல் சிறையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பி ஓடிய செய்தி மறைவதற்குள் தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ள செய்தி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் இவ்வளவு கைதிகள் தப்பியது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது.
தற்போதைய விஞ்ஞான உலகில் கண்காணிப்பு வசதிகள், பாதுகாப்பு வசதிகளும் நிறைந்துள்ள இக்காலகட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது பொதுமக்களுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடர்ந்து தமிழகம் முழுவதும் குழந்தைகள் கானாமல் போவது, கொலை, கொள்ளை, போதை பொருட்கள் பிரச்சனை இப்படி நித்தம் நித்தம் நடக்கும் நிலையில் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு எந்த தொழில் முனைவோர்களும் முன்வர மாட்டார்கள்.
காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை இப்படி சந்தி சிரிக்க வைப்பது தமிழக நலனுக்கு நல்லதல்ல. இச்சம்பவங்கள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதுடன் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கின்றன. தமிழகத்தின் பக்கம் தொழில்துறையினர் திரும்பி கூட பார்க்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இரும்பு கரம் கொண்டு இந்த பிரச்சனையை அடக்க வில்லை என்றால் தமிழகத்தின் நிலைமை கேள்விக்குறியாகும் என்பதனை வருத்தத்துடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் பதிவு செய்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.