தனியார் வங்கி கடன் முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

திருவள்ளூர் அருகே தனியார் வங்கி கடன் முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.
தனியார் வங்கி கடன் முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த பட்டரைபெரும்புதூர் ஊராட்சியில் தனியார் வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியின் பட்டரைப்பெருமந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 30க்கும் மேற்பட்டவர்கள் தங்களது பத்திரங்களை அடமானம் வைத்து பல்வேறு வகையான கடன்களை வாங்கினார்கள்.

ஆனால் அவர்களுக்கு வழங்கிய கடனில் அவர்கள் வாங்கிய கடன் தொகைக்கு பதிலாக அதிகப்படியான தொகை பெற்றுள்ளதாக வரவு வைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் இதுகுறித்து வங்கி மேலாளரிடம் கேட்டபோது அவர் எந்த பதிலும் சொல்லாமல் பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வங்கியில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.

தற்போது பாதிக்கப்பட்ட பட்டரைபெரும்புதூரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி நேற்று திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தான் மறைத்துக் கொண்டு வந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த மண்ணெண்ணை பாட்டிலை பறித்து அவர் மீது தண்ணீரை ஊற்றினார்கள்.

இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் திடீ ரென பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தனது உடலில் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com