

திருச்செந்தூர்,
திருச்செந்தூர் அருகே பட்டப்பகலில் ஓய்வுபெற்ற பேராசிரி யையை, அவரது மகன் அம்மிக்கல்லால் அடித்துக்கொலை செய்தார். பிணத்தை புகைப்படம் எடுத்து வாட்ஸ்-அப்பில் அவரது அண்ணணுக்கு அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர் அருகே குமாரபுரம் ஜெயா நகரை சேர்ந்தவர் அன்புமணி. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி ரேணுகா (வயது 62). ஓய்வு பெற்ற பேராசிரியை.
இவரது மூத்த மகன் சென்னையில் போலீஸ்காரராக பணி யாற்றி வருகிறார். 2-வது மகன் தங்கபாலன் (27). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்காக கடந்த 3 ஆண்டுகளாக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று காலையில் அன்புமணி, பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுவிட்டார். வீட்டில் ரேணுகாவும், தங்கபாலனும் மட்டுமே இருந்துள்ளனர்.
அப்போது திடீரென தாய், மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தங்கபாலன் அம்மிக்கல்லை எடுத்து பெற்ற தாய் என்றும் பாராமல் ரேணுகாவை சரமாரி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ரேணுகா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
அதன்பிறகு தங்கபாலன், தாயை கொலை செய்துவிட்டதாக கூறி ரேணுகாவின் உடலை புகைப்படம் எடுத்து சென்னையில் போலீசாக பணிபுரியும் தனது அண்ணனுக்கு வாட்ஸ்-அப் பில் அனுப்பி உள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுதார். தகவல் கிடைத்ததும் திருச்செந்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ரேணுகாவின் உடல் அருகே தங்கபாலன் அமர்ந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே ரேணுகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தங்கபாலனை போலீசார் கைது செய்தனர்.
தற்போது அவர் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். பட்டப்பகலில் தாயை, மகனே அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் திருச்செந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.