

ஸ்ரீவில்லிப்புத்தூர்,
மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கொடுத்த தகவலின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனர். தற்போது 3 பேரும் மதுரை மத்திய சிறையில் உள்ளனர்.
இந்நிலையில் நிர்மலா தேவி உடல் நலக் குறைவை சுட்டிக் காட்டி 4 வது முறையாக ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுக்கள் மீதான விசாரணை மாவட்ட நீதிபதி முத்துசாரதா முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஜாமீன் மனு ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி முத்து சாரதா உத்தரவிட்டார். இதனையடுத்து நிர்மலா தேவி மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமீன் மனு ஏற்கனவே 3 முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று 4 வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.