சென்னை மாநகராட்சியில் செப்டம்பர் 30ம் தேதிக்குள் சொத்து, தொழில் வரி செலுத்த வேண்டும்..!

வரி செலுத்துவதற்கு ஏதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவாய்த்துறை தலைமையிடத்தில் பொது வசூல் மையம் இயங்கும்.
சென்னை மாநகராட்சி
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய சொத்து வரியினையும், அரசு அலுவலகங்கள் உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களைச் சார்ந்த பணியாளர்களின் தொழில் வரியினையும் மாநகராட்சிக்கு 30.09.2026க்குள் செலுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

30ம் தேதிக்குள் வரி செலுத்த வேண்டும்

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998ன் பிரிவு 117 - ன் படி, பணியாளர்களின் ஊதியத்திலிருந்து தொழில் வரியினை பிடித்தம் செய்து பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்துவது அந்நிறுவனங்களின் சட்டபூர்வ கடமையாகும். அவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட தொழில் வரியினை வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டும்.

மேலும், சொத்து உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்து வரியினை வரும் 30.09.2026க்குள் நிலுவையின்றி செலுத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023 விதி 268 (3)ன் படி தனி வட்டி விதிக்கப்பட வேண்டும்.

வார விடுமுறை நாட்களிலும் வரி செலுத்தலாம்

எனவே, வரி செலுத்துவோரின் சிரமத்தினை குறைக்கும் முகமாக சொத்து வரி, தொழில் வரி, நிறும வரி மற்றும் வரியில்லா இனங்கள் ஆகியவற்றிற்கான கட்டணங்களை செலுத்துவதற்கு ஏதுவாக 19.09.2026, 20.09.2026, 26.09.2026 மற்றும் 27.09.2026 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில்) ஆகிய நாட்களில் மண்டல அலுவலகங்கள் மற்றும் ரிப்பன் கட்டடம் தலைமையிடத்தில் உள்ள வருவாய்த்துறை பொது வசூல் மையம் (Common Collection Centre) செயல்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com