வாட்ஸ்அப் மூலம் சொத்து வரி, குடிநீர் கட்டணங்களை எளிதாக செலுத்தலாம் - சென்னை மாநகராட்சி ஆணையாளர்

குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்களை வாட்ஸ்அப் வழியாக செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சியின் வாட்ஸ்அப் செயலி வாயிலாக சொத்து வரி மற்றும் குடிநீர், கழிவுநீர் கட்டணங்களை எளிதாக செலுத்தலாம் என்று மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி, பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு குடிமை சேவைகளை இணையதளம் மற்றும் வாட்ஸ்அப் தளங்கள் மூலம் வழங்கி வருகிறது. சொத்து வரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் சேவைகள், புகார் பதிவு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட 42 சேவைகளுடன், தற்போது சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் (CMWSSB) குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்களையும் வாட்ஸ்அப் வழியாக செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சாட்பாட் எண் 94450 61913 மூலம் தங்களது சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்களை எளிதாகவும், பாதுகாப்பாகவும் செலுத்தலாம். மேலும் கட்டண விவரங்கள், நிலுவைத் தொகைகள் மற்றும் ரசீதுகளையும் உடனுக்குடன் பெற்றுக் கொள்ளலாம்.

இச்சேவைகள் மூலம் பொதுமக்கள் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் குறைவதுடன், நேரமும் செலவும் சேமிக்கப்படுகிறது. பொதுமக்கள் 24 மணி நேரமும் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் இந்த சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பொதுமக்களும் வாட்ஸ்அப் சேவைகளைப் பயன்படுத்தி தங்களது சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்களை காலதாமதமின்றி செலுத்தி இச்சேவைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com