குற்றாலம் தனியார் விடுதியில் 'ஸ்பா' என்ற பெயரில் விபசாரம்: 4 இளம்பெண்கள் மீட்பு

குற்றாலத்தில் பெரும்பாலும் ஆண்களுக்கு பெண்களே மசாஜ் செய்து வருகிறார்கள்.
‘ஸ்பா’ என்ற பெயரில் விபசாரம்
Published on

தென்காசி,

குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் சீசனை அனுபவிக்க குற்றாலத்திற்கு தினமும் வருகிறார்கள்.

இதையொட்டி குற்றாலத்தில் பல்வேறு தனியார் தங்கும் விடுதிகளில் மசாஜ் சென்டர்கள் இயங்குகின்றன. இதனை 'ஸ்பா' என்று அந்த விடுதிகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அங்கு பெரும்பாலும் ஆண்களுக்கு பெண்களே மசாஜ் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் 'ஸ்பா' என்ற பெயரில் பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக குற்றாலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், குற்றாலம் போலீசார் நேற்று அந்த தனியார் தங்கும் விடுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 'ஸ்பா' என்ற பெயரில் பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அங்கிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த நாராயணனின் மகன் நந்தகுமார் (வயது 24), கோட்டயத்தை சேர்ந்த ராஜப்பனின் மகன் அகில் (28) மற்றும் ஆலப்புழாவை சேர்ந்த முரளியின் மகன் ஆனந்த் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தார்கள்.

மேலும், அங்கிருந்த 4 இளம்பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com