சாலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குக! - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்
Published on

சென்னை,

சாலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

3 பேர் உயிரிழந்தனர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் உள்ள நத்தம்பட்டி நான்கு வழி சாலையில் கடந்த 12.07.2026 ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் வத்திராயிருப்பு, மேலப்பாளையத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் பூபதி, கார்த்திக், அங்காள ஈஸ்வரி, ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிகிச்சை

இவர்கள் தவிர சேர்வை, அவரது மனைவி வீரலட்சுமி, மகள்கள் காவியா, தனலட்சுமி, மகன் அஸ்வின், உறவினர் லட்சுமி ஆகிய ஆறு பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை ராஜாஜி அரசினர் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

நிதியுதவி செய்ய வேண்டும்

இதில் சேர்வை சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு விரைந்து நிதியுதவி செய்ய வேண்டும்.

மருத்துவ சிகிச்சை

சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தேவையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகளுக்கான உதவிகள் வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com