வீடுகளுக்கு புதிய சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்பு வழங்குவது நிறுத்தம்

கூடுதல் சிலிண்டர்களுக்காக சிலர் புதிய இணைப்பு பெறுவதாக புகார் வந்துள்ளதால், கியாஸ் இணைப்பு வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
வீடுகளுக்கு புதிய சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்பு வழங்குவது நிறுத்தம்
Published on

சென்னை,

மத்திய அரசின் உத்தரவை அடுத்து, வீடுகளுக்கு புதிய சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்பு வழங்குவதை, எண்ணெய் நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தி உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்காசிய நாடுகளில் கடந்த மார்ச் தொடக்கத்தில் ஏற்பட்ட போர் பதற்றத்தால் நம் நாட்டிற்கு எரிபொருள் எடுத்து வரும் கப்பல் போக்குவரத்து தடைபட்டது. இதனால் அந்த மாதம் 9-ம் தேதி முதல் வணிக சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டது. வீடுகளுக்கு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான இடைவெளி 21 நாட்களில் இருந்து நகரங்களில் 25 நாட்களாகவும், கிராமங்களில் 45 நாட்களாகவும் உயர்த்தப்பட்டன.

இந்த நிலையில் கியாஸ் சிலிண்டர்களை வாங்க, ஏற்கனவே சிலிண்டர் வைத்திருக்கும் சிலர் வேறு நபர்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி, கியாஸ் இணைப்பு பெற்று வருவதாக புகார்கள் எழுகின்றன. இதையடுத்து புதிய கியாஸ் இணைப்பு வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கூடுதல் சிலிண்டர்களுக்காக சிலர் புதிய இணைப்பு பெறுவதாக புகார் வந்துள்ளது. எனவே கியாஸ் இணைப்பு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. சிலிண்டர் வினியோகம் சீரடைந்ததும், புதிய இணைப்புகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com