பி.எஸ்.4 வாகன மோசடி: தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிய உத்தரவு - சென்னை ஐகோர்ட்டு அதிரடி

2020ம் ஆண்டுக்கு பின்னும் பி.எஸ். 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
சென்னை,
கடந்த 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பி.எஸ். 4 வாகனங்கள், 2020ம் ஆண்டு ஏப்ரலுக்கு பின் தடை செய்யப்பட்டன. இருப்பினும், 2020ம் ஆண்டுக்கு பின்னும் பி.எஸ். 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பான மனுவில், தமிழகத்தில் பி.எஸ். 4 ரக வாகனங்கள் உள்பட 315 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத்துறை ஆணையர் தெரிவித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மோசடியில் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.வினோத் ராஜா, பி.எஸ். 4 ரக வாகனங்களை பதிவு செய்ததில் பல அதிகாரிகள் தவறு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்வதற்காக வழக்கை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.






