புதுச்சேரி ஐ.பி.எஸ். அதிகாரி இஷா சிங் டெல்லிக்கு மாற்றம்

புதுச்சேரி ஐ.பி.எஸ். அதிகாரி இஷா சிங் டெல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் த.வெ.க. பொதுக்கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் விஜய் பங்கேற்றதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
அப்போது விஜய் பொதுக்கூட்ட மைதான நுழைவாயிலில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷாசிங் சோதனை பணியில் ஈடுபட்டார். பாஸ் இல்லாதவர்களுக்கு உள்ளே அனுமதி மறுக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் மற்றும் புஸ்சி ஆனந்த் மைதானத்தில் ஏராளமான இடம் உள்ளது. பாஸ் இல்லாத தொண்டர்களையும் உள்ளே செல்ல அனுமதியுங்கள் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் ஆவேசம் அடைந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷாசிங், ‘காவல்துறை என்ன செய்ய வேண்டும்? என நீங்கள் உத்தரவிடாதீர்கள். இங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் நாங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும், பதில் சொல்ல வேண்டும். கரூரில் நடந்த சம்பவத்தில் 41 பேர் பலியான சம்பவம் நினைவில் இல்லையா? அதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்கு தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்களுக்கு அளிக்கப்பட்ட நிபந்தனைகளை சரியாக பின்பற்றுங்கள்’ என்றார்.
விஜய் பொதுக்கூட்டத்தில் இஷா சிங் காட்டிய அதிரடி நடவடிக்கை அனைவரையும் ஈர்த்தது. அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. குறிப்பாக, புதுவை அமைச்சர் நமச்சிவாயம் இஷா சிங்கை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். தவெக மாநாட்டிற்கு பிறகு அவரின் துணிச்சலுக்காக பலரும் சமூக வலைதளங்களில் கொண்டாடினர்.
இந்த நிலையில், புதுச்சேரியில் பணியாற்றிய ஐ.பி.எஸ். அதிகாரி இஷா சிங்கை டெல்லிக்கு மாற்றம் செய்து மத்திய அரசின் சார்பு செயலாளர் ராகேஷ்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார். அதுபோல புதுவை ஐ.ஜி. அஜித்குமார் சிங்களா, ஐ.ஏ.எஸ். அதிகாரி பத்மா ஜெய்ஸ்வாலும் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.






