

புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் நிஜாம் காலனி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் சுமார் 7 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. கடையை திறப்பதற்கு முன்பே ஷட்டர் இடைவெளி வழியாக பாம்பு உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் ஷட்டரை திறந்து பார்த்தபோது, பாம்பு உள்ளே இருந்தது தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று, கடைக்குள் இருந்த சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பையில் அடைத்து எடுத்துச் சென்றனர். கடைக்குள் பாம்பு இருந்ததை பார்த்து மக்கள் பீதியடைந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.