

சென்னை:
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமியை தமிழக அரசு நியமித்துள்ளது.
இதுவரை திரைப்படக் கலைஞர் வாகை சந்திரசேகர் தலைவராக பொறுப்பு வகித்து வந்த நிலையில், அவருக்கு பதிலாக புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய சங்கீத நாடக அகாதமியின் நோக்கங்களை மாநில அளவில் செயல்படுத்துவதற்காக கடந்த 1955-ம் ஆண்டு ‘தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம்’ என்ற பெயரில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. பின்னர், 1973-ம் ஆண்டு முத்தமிழைக் குறிக்கும் வகையில் ‘தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தமிழகத்தின் பாரம்பரியக் கலைகள், நாட்டுப்புறக் கலை வடிவங்கள் மற்றும் கலைஞர்களை பாதுகாத்து, வளர்ப்பதில் இந்த அமைப்பு முக்கிய பங்காற்றி வருகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நாட்டுப்புறப் பாடகரான புஷ்பவனம் குப்புசாமி, திரைப்படப் பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். நாட்டுப்புறப் பாடல்களுக்கு புத்துயிர் அளித்து அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இளையராஜா, வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படப் பாடல்களை பாடியுள்ளார். கலைத்துறையில் இவரது பங்களிப்பை பாராட்டி தமிழக அரசு ‘கலைமாமணி’ விருதும் வழங்கியுள்ளது.
இயல், இசை, நாடக மன்ற தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து புஷ்பவனம் குப்புசாமி கூறுகையில், “தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராக என்னை நியமித்த தமிழக அரசுக்கும், முதலமைச்சர் விஜய்க்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கிராமிய கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன். இயல், இசை, நாடகம் என எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நலிந்த நிலையில் உள்ள கலைஞர்களுக்கு கரம் கொடுத்து அவர்களை உயர்த்துவோம். கலைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்றார்.