புழல் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் பொங்கல் விழா

பள்ளி மாணவ - மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினார்கள்.
சென்னையை அடுத்த புழலில் அமைந்துள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அன்னாரின் சிலைக்கு முன்பாக ஆசிரியைகளால் சர்க்கரை பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டு பூஜை செய்து பொங்கல் விழா நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இவ்விழாவிற்கு சென்னை வாழ் நாடார்கள் சங்கம் மற்றும் காமராஜ் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டி.தங்கமுத்து தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஆலந்தூர் நாடார் ஐக்கிய சங்க தலைவர் பி.கணேச நாடார் கலந்துகொண்டு பாராட்டுரை ஆற்றினார்.
விழாவில் சென்னை வாழ் நாடார்கள் சங்க பொதுச்செயலாளர் ஆர்.செல்வக்குமார், பொருளாளர் கே.எம்.செல்லத்துரை, துணைத்தலைவர்கள் ஏ.சிற்றம்பலம், ஆர்.பெத்துப்பாண்டியன், என்.செந்தில், அறக்கட்டளை செயலாளர் எம்.சுந்தர், அறக்கட்டளை பொருளாளர் ராஜாமணி முருகேச பாண்டியன், கல்விக் குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாண்டியன், வி.டி.சி.செல்வம், அறக்கட்டளை உறுப்பினர்கள் ஏ.பழனிச்சாமி, எஸ்.கணேஷ் பாபு, சங்க உறுப்பினர்கள் எஸ்.கே.முனியசாமி, ரமேஷ்பாபு ஆறுமுகசாமி மற்றும் முன்னாள் பொருளாளர் கே.வி.பி.பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவ - மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், பரதநாட்டியம் ஆகிய கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினார்கள். மேலும் உறியடித்தல், பள்ளி ஆசிரிய - ஆசிரியைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், 10, 11, 12-ம் வகுப்பில் பயிலும் மாணவ - மாணவிகளுக்கிடையே கோலப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பொங்கல் அன்பளிப்பாக வேட்டி, புடவை, அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு ஆகியவை வழங்கப்பட்டது. பள்ளி மாணவ - மாணவிகள் பயணம் செய்து மகிழ மாட்டு வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பெற்றோர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். வருகை தந்த அனைவருக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.






