மாற்றுத்திறனாளிகள் பயண சலுகை அட்டையை ஆன்லைனில் பெறலாம் - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள் பயண சலுகை அட்டையை ஆன்லைனில் பெறலாம் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் பயண சலுகை அட்டையை ஆன்லைனில் பெறலாம் - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
Published on

சென்னை,

ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் ரெயில்களில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. இந்த கட்டண சலுகையை பெறுவதற்கு ரெயில்வே நிர்வாகத்திடம் இருந்து சலுகை கட்டணத்திற்கான அடையாள அட்டையை பெற்றிருக்க வேண்டும்.

இதற்காக அந்தந்த ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் இருக்கும் வணிகப்பிரிவு அலுவலர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் கட்டண சலுகை அட்டையை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டண சலுகை அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள ரெயில்வே நிர்வாகம் வழிவகை செய்துள்ளது.

இந்த டிஜிட்டல் மயம் வசதியானது, தெற்கு ரெயில்வேயில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் என 6 கோட்டங்களிலும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன்மூலம் மாற்றுத்திறனாளிகள் சலுகை அடையாள அட்டையை பெறவும், புதுப்பிக்கவும் ரெயில்வே அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இதற்காக https://divyangjanid.indianrail. gov.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

மாற்றுத்திறனாளி பயணிகள், தங்களின் சலுகை அடையாள அட்டையை பெற அல்லது புதுப்பிக்க தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களுடன் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு தகுதியுடைய நபர்களாக பார்வை குறைபாடு உள்ள நபர்கள், பார்வை முழுமையாக இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்கள், செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள நபர்கள், எலும்பியல் ஊனமுற்றோர், முடக்குவாத நபர்கள் ஆகிய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

இந்த சலுகை அடையாள அட்டையை பெறும் மாற்றுத்திறனாளிகள், சலுகையுடன் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை டிக்கெட் கவுண்டர்கள் அல்லது ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான சீசன் டிக்கெட் பெறவும், இந்த அடையாள அட்டை பயன்படுகிறது. இந்த டிஜிட்டல் மயத்தை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com