குற்றாலம் கோவிலுக்குள் பதுங்கிய மலைப்பாம்பு - பக்தர்கள் அதிர்ச்சி

கோவிலில் மலைப்பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
குற்றாலம் கோவிலுக்குள் பதுங்கிய மலைப்பாம்பு - பக்தர்கள் அதிர்ச்சி
Published on: 

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பழமைவாய்ந்த குற்றாலநாதர் கோவில் உள்ளது. மெயின் அருவிக்கரையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு அடிக்கடி மலைப்பாம்பு, உடும்பு போன்ற வன உயிரினங்கள் புகுந்து விடுகின்றன. இந்த நிலையில் நேற்று கோவிலில் உள்ள நகை மற்றும் பொருட்கள் பாதுகாப்பு பெட்டக அறையை ஊழியர்கள் திறந்தனர்.

அப்போது அங்கு சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு பதுங்கியிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வனத்துறையினர் விரைந்து சென்று, மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சென்றனர். பின்னர் அதனை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். கோவிலில் மலைப்பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதேபோன்று ஆலங்குளம் அருகே மாறந்தையில் இருந்து கல்லத்திக்குளம் செல்லும் சாலையோரத்தில் உள்ள தோட்டத்தில் பதுங்கியிருந்த சுமார் 12 அடி நீள மலைப்பாம்பு மயிலை பிடித்து விழுங்கி கொண்டிருந்தது. இதனைக் கண்ட அப்பகுதியினர் ஆலங்குளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் மலைப்பாம்பை பிடிக்க முயன்றனர். அப்போது மலைப்பாம்பு விழுங்கிய மயிலை கக்கியது. அந்த மயில் இறந்தது. பின்னர் மலைப்பாம்பை பிடித்து சென்று வனத்துறையினர் மூலம் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்றுவிட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com