தமிழகம் வந்தார் ராகுல் காந்தி; பொங்கல் விழாவில் பங்கேற்கிறார்...!

கர்நாடகாவில் இருந்து ஹெலிகப்டர் மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு ராகுல் காந்தி வந்தார்.
தமிழர் திருநாளான தை முதல்நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாளை மறுதினம் (15ம் தேதி) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இதனிடையே, பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார். கர்நாடகாவில் இருந்து ஹெலிகப்டர் மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு ராகுல் காந்தி வந்தார். கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் ராகுல் காந்தி மாணவ-மாணவியர் மத்தியில் உரையாற்றுகிறார்.
இதனை தொடர்ந்து பள்ளியின் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் விழாவில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து ராகுல் காந்தி பொங்கல் விழாவில் பங்கேற்கிறார். இந்த பொங்கல் விழாவில் 108 பெண்கள் மண்பானையில் பொங்கல் வைக்கின்றனர். இந்த விழாவில் மாணவ-மாணவியர், பெண்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.






