2029-ல் 'இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் - அமைச்சர் விஸ்வநாதன்

காங்கிரஸ் தலைவர்களாகிய நாங்கள் இதில் மிக தெளிவாக இருக்கிறோம் என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
2029-ல் 'இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் - அமைச்சர் விஸ்வநாதன்
Published on

சென்னை,

2029 மக்களவைத் தேர்தலில் 'இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்

அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பிற தேசிய தலைவர்கள் குறித்தும் பரவலான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் ஆளும் தரப்பு (தவெக) அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் ஒரு பகுதியினரிடமிருந்து எழுந்துள்ள சூழலில் இவரது கருத்து வெளியாகியுள்ளது.

பிரதமர் வேட்பாளர்

இது குறித்து அவர் கூறுகையில், “காங்கிரஸ் தலைவர்களாகிய நாங்கள் இதில் மிக தெளிவாக இருக்கிறோம். எங்கள் அன்பிற்குரிய தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திதான் 2029-க்கான 'இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்" என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு அறைகள்

இதனைத்தொடர்ந்து நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விவரித்த அமைச்சர் விஸ்வநாதன், மீட்புப் பணிகளை மேற்பார்வையிட நான்கு பேர் கொண்ட அமைச்சர்கள் குழு நேற்று இரவு அவசரமாக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சூழ்நிலையை 24 மணி நேரமும் கண்காணிக்க, சென்னை மற்றும் புதுடெல்லி ஆகிய இடங்களில் பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறைகளை தமிழக அரசு திறந்துள்ளது” என்று தெரிவித்தார்.

தேவையற்ற விவாதங்கள்

சட்டமன்ற நடவடிக்கைகளில் பல மணிநேரம் "தேவையற்ற விவாதங்களுக்காக" செலவிடப்படுவதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், “தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்புள்ள விவாதத்திற்கான சரியான தளம் சட்டமன்றமே” என்று அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com