

சென்னை,
தமிழகத்தில் வரும் 23-ந் தேதி (வியாழக்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பொதுக் கூட்டத்தை நாளை (15-ந் தேதி) சேலத்தில் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில், பங்கேற்க வருமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ராகுல் காந்தி தரப்பில் இருந்து சாதகமான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தி.மு.க. தலைமை அதிருப்தியில் இருக்கிறதாம்.
சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தபோதே, தி.மு.க. - காங்கிரஸ் இடையே பிரச்சினை எழுந்தது. இதனால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய காங்கிரஸ் தலைமை பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது. இதற்கு ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்த அதே நேரத்தில், அவரது தாயாரான சோனியாகாந்தி இதற்கு மறுப்பு தெரிவித்தாராம். அதன்பின்னரே, தி.மு.க.வுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராகுல்காந்தி தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வருவதால், தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, புதுச்சேரி தேர்தல் பிரசாரத்திற்கு ராகுல்காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே நாளில் பிரசாரத்திற்கு சென்றபோதும், ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவில்லை. வெவ்வேறு நேரத்தில் பிரசாரம் செய்தனர். கேரள தேர்தல் பிரசாரத்திற்காக செல்ல, சென்னை மற்றும் கோவைக்கு ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி வந்தபோதும்கூட பிரசாரம் எதுவும் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில், தமிழ்நாடு தேர்தல் பிரசாரத்திற்கு ராகுல் காந்தி வருவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். அதைபோல மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, தெலங்கானா, கர்நாடக முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகள் என அனைவரும் தமிழகத்திற்கு வந்து பிரசாரம் மேற்கொள்வார்கள் அவர் தெரிவித்தார்.