

சென்னை,
ராகுல் காந்தியின் அரசியல் பித்தலாட்டங்களுக்கு நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை தகுந்த பாடம் புகட்டுவார்கள் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தேர்தல் ஆணையம் குறித்து அவதூறு பரப்பிய எதிர்க்கட்சிகளுக்கு சம்மட்டி அடி - தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம்!
தொடர் தேர்தல் தோல்விகளால் விரக்தியின் விளிம்பில் நிற்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், எதிர்க்கட்சிகளும் காழ்ப்புணர்ச்சியால் இந்திய ஜனநாயகக் கட்டமைப்பு மற்றும் அரசியல் சாசன அமைப்புகள் மீது அவதூறுகளை வாரி இறைத்து வருகின்றனர். SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையர்களில் இருவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாகவும் பரப்பி வந்த அவதூறுகளை உடைக்கும் விதமாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) தொடர்பான அனைத்து முக்கிய உத்தரவுகளும், கால அட்டவணைகளும் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் என மூன்று ஆணையர்களின் ஒருமனதான (Unanimous) ஒத்த முடிவின்படியே எடுக்கப்பட்டவை என்பது ஆணித்தரமாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த SIR நடைமுறைகளையும் படிவம் 6 உறுதிமொழியையும் நாட்டின் மாண்புமிகு உச்ச நீதிமன்றமே உறுதிசெய்து சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ள நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் ஜனநாயக அமைப்புகளையும் கொச்சைப்படுத்தும் ராகுல் காந்தியின் பொய் மூட்டைகள் சுக்குநூறாக உடைந்து போயுள்ளன.
தேர்தல் நடைமுறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளைப் பாராட்டக்கூட காங்கிரஸுக்கு மனமில்லை. வாக்காளர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் இந்த உன்னத சீர்திருத்தங்களைத் திசைதிருப்ப நினைக்கும் எதிர்க்கட்சிகளின் நாசகார அரசியலை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்; இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் தன்னாட்சி நிறுவனங்களையும் திட்டமிட்டு இழிவுபடுத்த முயலும் ராகுல் காந்தியின் அரசியல் பித்தலாட்டங்களுக்கு நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை தகுந்த பாடம் புகட்டுவார்கள்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.