

சேலம்,
நாகர்கோவில்- மும்பை லோகமான்ய திலக் டெர்மினல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16340) நேற்று வழக்கம் போல் இயக்கப்பட்டது. இந்த ரெயில் சேலம் சந்திப்பு ரெயில் நிலையம் அருகில் வந்த போது பலத்த மழை பெய்தது. அப்போது ரெயிலின் மேற்கூரை வழியாக மழைநீர் பெட்டிக்குள் ஒழுகியது. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாயினர்.
மேலும், அங்கிருந்த மின்சார பலகை மீது தண்ணீர் வடிந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். இதேபோல் கழிவறைக்கு அருகில் இருக்கும் மின்சார கட்டுப்பாட்டு பலகை பகுதியிலும் தண்ணீர் கசிந்தது. ரெயில் பெட்டிக்குள் தேங்கிய மழைநீரை பணியாளர்கள் சேலம் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்ற போது அப்புறப்படுத்தினர். பின்னர் ரெயில் இங்கிருந்து கிளம்பி சென்றது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.