பதுக்கப்படும் மானிய உர மூட்டைகள்: குற்றவாளிகளை பாதுகாக்கிறதா த.வெ.க. அரசு? நயினார் நாகேந்திரன் கேள்வி

மத்திய அரசால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
பதுக்கப்படும் மானிய உர மூட்டைகள்: குற்றவாளிகளை பாதுகாக்கிறதா த.வெ.க. அரசு? நயினார் நாகேந்திரன் கேள்வி
Published on

சென்னை,

தமிழக விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க பா.ஜ.க. எந்த எல்லைக்கும் செல்லும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

உர மூட்டைகள்

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள நல்லூரான்பட்டியில், நமது மத்திய அரசால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் நூற்றுக்கணக்கான உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அரசு மானிய உர மூட்டைகளை வேறு சாக்குப்பைகளுக்கு மாற்றி, வணிக நோக்கில் விற்பனை செய்யும் முறைகேடு நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மிகப்பெரிய ஊழல்

ஆண்டுதோறும் சுமார் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் மத்திய அரசின் மானிய விலையில் உர மூட்டைகள் வழங்கும் திட்டத்திற்கு, 2026–27 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.1.71 லட்சம் கோடியும், நடப்பு காரிப் பருவத்திற்கு மட்டும் தனியாக ரூ.41,534 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் 45 கிலோ எடை கொண்ட யூரியா மூட்டைகளின் விலை சுமார் ரூ. 250 முதல் ரூ. 300 வரை மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், இதுபோன்ற சட்டவிரோத பதுக்கல் காரணமாக, இதே உர மூட்டைகளை சுமார் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை கொடுத்து விவசாயிகள் வெளியில் வாங்க வேண்டிவரும். இந்த மிகப்பெரிய ஊழல் தமிழகத்தில் தொடர்கதையாகி வருவது, கடும் கண்டனத்திற்குரியது.

விவசாய அணி சார்பாக போராட்டங்கள்

கடந்த ஜூலை மாதத்தில், கோவை திருமலையாம்பாளையம் அருகேயுள்ள குடோனில் இதே போன்ற மானிய உர மூட்டைகள், டன் கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகிய போதே, தற்போதைய த.வெ.க. அரசை நாம் எச்சரித்து இருந்தோம். ஆனால், வெட்டி விளம்பரங்கள் செய்வதிலும், விதவிதமான ரீல்ஸ்கள் எடுப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இதை துளியும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

எனவே, இனியும் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் முதல்-அமைச்சர் காலம் தாழ்த்தினால், தமிழக பா.ஜ.க.வின் விவசாய அணி சார்பாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்க பா.ஜ.க. எந்த எல்லைக்கும் செல்லும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com