

சென்னை,
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இறைவன் அவரது திருமறையில், மனித வாழ்க்கையில் அகமும், புறமும் தூய்மையடைய ஒரு பயிற்சி தான் நோன்பு வாழ்வில் நற்பண்புகளை வலியுறுத்தும் திருநாளான ரம்ஜான் பண்டிகை உலகெங்கும் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரம்ஜான் பண்டிகை என்பது ஒரு புனிதமான அனுபவம் ஆகும். இஸ்லாம் எத்தகைய நன்னெறிகளை கற்பிக்கிறதோ, அவை அனைத்தையும் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் காலம் தான் ரம்ஜான் பண்டிகை ஆகும். ஒரு மாதம் முழுவதும் புனித நோன்பிருந்து, ஏழை எளியவர்களுக்கு தான தருமங்களை வழங்கும் இத்திருநாள், மனிதநேயத்தைப் போற்றும் உன்னதமான நாளாகும். ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி அனைவரும் சமம் என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு உரக்கச் சொல்லும் ஈகைத்திருநாளாகும்.
இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில் தான் இறைத்தூதர் நபிகள் நாயகத்திற்கு குரான் வெளிப்படுத்தப்பட்டது என்பதால், அதைக் குறிக்கும் வகையில் இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் பகல் நேரத்தில் நோன்பிருந்து நபிகளையும், குரானையும் போற்றுகின்றனர். இஸ்லாத்தின் புனிதமான 5 கடமைகளில் முக்கியமானது ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறைவு வரை மேற்கொள்ளப்படும் நோன்பு. அகமும், புறமும் தூய்மையடைந்து விட்டால் மனிதர்கள் மகான்களாக மாறி விடுவார்கள்.
இஸ்லாம் கற்பிக்கும் நன்னெறிகளில் முதன்மையானது மதுவை விலக்குதல் ஆகும். மது அருந்துவதும், மதுவை உற்பத்தி செய்து விற்பதும் சாத்தானின் செயல்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
ஆனால் ஆட்சியாளர்கள் கூட, இஸ்லாமியம் கூறும் நன்னெறிகளுக்கு மாறாக மதுவை விற்று தான் ஆட்சி நடத்துகின்றனர். தமிழ்நாட்டின் எந்த மூலையில் நின்று திரும்பிப் பார்த்தாலும் நான்கு திசைகளிலும் நான்கு மதுக்கடைகளைப் பார்க்க முடியும் என்ற அளவுக்கு மதுவும், கஞ்சா போதையும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற வேண்டும். மதுவில்லா தமிழகம் வேண்டும் என்பதே நமது விருப்பம்.
உலககெங்கும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும் உழைக்க இந்த புனிதமான நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.