அன்புமணி கூட்டும் பொதுக்குழுவுக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் ஐகோர்ட்டில் வழக்கு


அன்புமணி கூட்டும்  பொதுக்குழுவுக்கு எதிராக  பாமக நிறுவனர் ராமதாஸ் ஐகோர்ட்டில்  வழக்கு
x
தினத்தந்தி 6 Aug 2025 5:25 PM IST (Updated: 6 Aug 2025 5:26 PM IST)
t-max-icont-min-icon

தன்னைத்தானே தலைவர் என சொல்லி கொண்டு அன்புமணி செயல்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. கட்சியில் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு, நிர்வாகிகள் நீக்கம், சேர்ப்பு என புதிய, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இருவருக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வரும் வரும் சூழலில், பாமகவின் தலைமை அலுவலகம் என்று அன்புமணி அலுவலகத்தின் முகவரியை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருந்தது.

இது ராமதாஸ் தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாக சொல்லபடுகிறது. இந்த நிலையில், கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் ஆக.17-ம் தேதி நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். ராமதாசுக்கு போட்டியாக வரும் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அன்புமணி தரப்பை சேர்ந்த வடிவேல் ராவணன் அறிவித்துள்ளார். இருவரும் பொதுக்குழுவை அறிவித்ததால் பாமகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாமக பொதுக்குழுவை அன்புமணி கூட்டுவதற்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. ராமதாஸ் நியமித்த பாமக மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தன்னைத்தானே தலைவர் என சொல்லிக் கொண்டு அன்புமணி செயல்படுவதாகவும், மாமல்லபுரத்தில் ஆக.9ம் தேதி நடக்கும் பாமகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. முரளிசங்கர் தொடர்ந்த வழக்கு விரைவில் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.

1 More update

Next Story