

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், விவசாய நிலங்கள் பசுமையாக மாறி, பச்சைக் கம்பளம் விரித்தது போல் காட்சியளிக்கின்றன. இந்த மழையினால் சம்பா சாகுபடி பணிகள் உத்வேகம் பெற்றுள்ளதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தால் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. வறட்சி மாவட்டமாக அறியப்படும் ராமநாதபுரத்தில், மழைநீரால் செழித்து வளர்ந்துள்ள நெற்பயிர்கள் அப்பகுதியையே பசுமை போர்த்தியது போல் மாற்றியுள்ளன.
போதிய மழையை எதிர்பார்த்துக் காத்திருந்த விவசாயிகளுக்கு, தற்போதைய மழை நெல் விதைப்பு, நடவு மற்றும் பயிர் வளர்ச்சிக்குப் பெரிதும் கைகொடுத்துள்ளது. இந்த ரம்மியமான காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகின்றன.
மாவட்டத்தில் பதிவான மழையளவின்படி, அதிகபட்சமாக ஆர்.எஸ். மங்கலத்தில் 63 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல், ராமநாதபுரத்தில் 34 மி.மீ. மற்றும் தொண்டியில் 33.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளதால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒருபுறம் விவசாய நிலங்கள் செழித்தாலும், மறுபுறம் தொடர் மழையால் ராமநாதபுரம் நகரின் பாரதி நகர், மதுரையார் தெரு உள்ளிட்ட தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும், உப்பளங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றும் (திங்கட்கிழமை) அடுத்த சில நாட்களுக்கும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், லேசான முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.