ராமநாதபுரம்: குழி தோண்டியபோது குழாய் உடைந்து வெளியேறிய கியாஸ்; வாகன ஓட்டிகள் அச்சம்

சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
ராமநாதபுரம்:  குழி தோண்டியபோது குழாய் உடைந்து வெளியேறிய கியாஸ்; வாகன ஓட்டிகள் அச்சம்
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே உள்ள பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதி நகரில் வணிக வளாகங்கள் அருகே குழிகள் தோண்டப்பட்டு, தனியார் நிறுவனத்தின் மூலம் வீட்டிற்கு தேவையான சமையல் கியாசானது, குழாய் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கியாஸ் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கியாஸ் இணைப்பு செல்லக்கூடிய பகுதியில் புதிதாக மரக்கன்று நடுவதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது.

தீயணைப்பு படை

அப்போது அதன் அடியில் சென்ற குழாய் உடைந்து, திடீரென கசிவு ஏற்பட்டு சூறாவளி காற்று போல் வேகமாக கியாஸ் வெளியேறி வந்தது. இதனால் பாரதிநகரில் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதி சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். மேலும் அந்த பகுதியில் தடுப்புகள் அமைத்து, கியாஸ் கசிவை தடுக்க முயற்சிகள் மேற்கொண்டனர்.

நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு சீரமைக்கப்பட்டு கியாஸ் கசிவு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், பொக்லைன் எந்திரம் மூலம் குழிகள் தோண்டும்போது இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. எனவே அனுமதி பெறாமல் குழிகள் தோண்டுவதை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com