

ராமேசுவரம்,
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 9 மீனவர்களையும், அவர்களது விசைப்படகையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் இன்று 5-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி எடின் புரோகர் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அப்போது, இலங்கை கடற்படையினர் அந்த விசைப்படகை சிறைப்பிடித்ததுடன், அதில் இருந்த எபிஸ்டன், மத்தியா, ஜான்ஜெய்சன், ஸ்டீவன்சன், சுபார்டன், அபிஸ்டன், மோபிஸ், அந்தோணி பிரதீப், அந்தோணி புரூடஸ் ஆகிய 9 மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது விசைப்படகையும் உடனடியாக விடுவிக்க வேண்டும், இந்தியா - இலங்கை இடையே இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் கடந்த திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று 5-வது நாளாகவும் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இதனால் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
வேலைநிறுத்தம் காரணமாக ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. மேலும், 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மீனவர்களின் தொடர் வேலைநிறுத்தத்தால் மீன்பிடித் தொழில் முடங்கியுள்ளது. இதன் காரணமாக சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.