ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்: போலீசாருடன் தள்ளுமுள்ளு

பாம்பன் சாலை பாலத்தில் விசைப்படகு மீனவர்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Image Courtacy: PTI
Image Courtacy: PTI
Published on

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 9-ந் தேதி 3 விசைப்படகுகளில் 23 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 23 மீனவர்களையும் நடுக்கடலில் சிறைபிடித்து கைது செய்தனர். அதோடு 3 படகுகளையும் பறிமுதல் செய்தனர். 23 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து 23 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் நேற்று யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, 23 மீனவர்களையும் வருகிற 25-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து 23 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பருத்தித்துறை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. மேலும் ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கையின் காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மீனவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அடுத்தடுத்து மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ராமேசுவரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் மீனவர்கள் கைதை கண்டித்து பாம்பன் சாலை பாலத்தில் விசைப்படகு மீனவர்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவிக்கக்கோரி மீனவர்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மீனவர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com