விழுப்புரம் அருகே சோழர் கால அரிய முருகன் சிற்பம் கண்டெடுப்பு

மரக்காணம் அருகே 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கால அரிய முருகன் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
விழுப்புரம் அருகே சோழர் கால அரிய முருகன் சிற்பம் கண்டெடுப்பு
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அமைந்துள்ளது ஆலத்தூர் கிராமம். இப்பகுதியில் விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன், கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது சோழர் காலத்தைச் சேர்ந்த அரிய முருகன் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி அவர் கூறியதாவது:-

ஆலத்தூர் கிராமத்தின் வயல்வெளியில் வெட்ட வெளியில் பலகைக்கல் சிற்பம் நின்றிருக்கிறது. அப்பகுதி மக்கள் இந்த சிற்பத்திற்கு புடவை அணிவித்து பெண் தெய்வமாக வழி பட்டு வருகின்றனர். ஆனால் இது முருகன் சிற்பமாகும். தலையில் கரண்ட மகுடம் அலங்கரிக்க 4 கரங்களுடன் நின்ற நிலையில் முருகன் காட்சி தருகிறார். அவரது பின்னிரு கரங்களில் வலது கரம் சக்தி ஆயுதத் தையும் இடது கரம் அட்ச மாலையையும் ஏந்தி இருக்கின்றன. முன்னிரு கரங்களில் வலது கரம் அபய முத்திரையுடனும் இடது கரம் இடுப்பின் மீது வைத்த நிலையிலும் காணப்படுகின்றன.

மேலும் நீண்ட காதணிகள் மற்றும் கழுத்தணி, இடையாடை காணப்படுகின்றன. முகம் தேய்ந்த நிலையில் தெளிவாக இல்லை. இந்த சிற்பத்தின் காலம் கி.பி. 10-ம் நூற்றாண்டு சோழர் காலம் ஆகும். இச்சிற்பமானது 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. கைகளில் சக்தி ஆயுதம் மற்றும் அட்ச மாலை ஏந்தி நிற்கும் முருகன் சிற்பம் காணப்படுவது மிகவும் அரியதாகும்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கண்டறியப்பட்ட முருகன் சிற்பங்களில் ஆலத்தூர் முருகன் சிற்பம் அரியதும், தனித்துவம் வாய்ந்ததும் ஆகும். அப்பகுதி மக்கள் இந்த சிற்பத்திற்கு ஆண் தெய்வத் திற்கு உரிய ஆடைகளை அணிவித்து உரிய முறையில் வழிபாடுகள் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com