

நாமக்கல்,
நாமக்கல் அருகே உள்ள ராசாம்பாளையம் சுங்கச்சாவடியில், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணம் திடீரென 9 மடங்கிற்கு மேல் உயர்த்தப்பட்டதை கண்டித்து, கல்வி நிறுவன வாகனங்களை சுங்கச்சாவடியிலேயே நிறுத்தி நூதன போராட்டம் நடத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசாம்பாளையம் சுங்கச்சாவடி வழியாக தினசரி சென்று வரும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள், வேன்களுக்கு இதுவரை மாதாந்திர கட்டணமாக ரூ.1,000 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சுங்கச்சாவடி நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, இந்த கட்டணத்தை ரூ.9,160 ஆக அதிரடியாக உயர்த்தியுள்ளது.
இந்த கட்டண உயர்வால் அதிர்ச்சியடைந்த தனியார் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர், இன்று (திங்கட்கிழமை) காலை தங்களது கல்வி நிறுவன பேருந்துகளை சுங்கச்சாவடி கட்டண வசூல் மையங்களுக்கு முன்பாக குறுக்காக நிறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் பொதுமக்கள், அரசுப் பேருந்துகள் மற்றும் அவசர சிகிச்சை வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வாகனங்களை சாலையோரம் நிறுத்த போராட்டம் நடத்துபவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
சுங்கச்சாவடி நிர்வாகம், தனியார் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் போலீசார் இடையே இந்த கட்டண உயர்வு தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.