

ஆக்கிரமிப்பு அகற்றம்
மாங்காடு அடுத்த கொளப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கணேஷ் நகர் பகுதியில் மணப்பாக்கம் குழலியம்மன் கோவிலுக்கு சொந்தமான 85 சென்ட் நிலத்தை ஜெயபால் என்பவர் ஆக்கிரமித்து மாடுகளை வளர்த்து வந்ததாக தெரிகிறது.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த இடத்தை காலி செய்யுமாறு பலமுறை வற்புறுத்தியும், இடத்தை காலி செய்யாமல் அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் நித்யா, கோவில் செயல் அலுவலர் சக்தி ஆகியோர் தலைமையில் மாங்காடு போலீசார் நேற்று விரைந்து சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கட்டிடங்களை பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றினார்கள்.
ரூ.63 கோடி சொத்து
மேலும் அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட மாடுகள் வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இந்த பகுதி இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
மேலும் இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் அந்த இரண்டு பகுதிகளிலும் வழிகள் அடைத்து தடுப்புகள் போடப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட இடத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.63 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க மாங்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.