

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கிரிவலம் என்பது தற்போதைய நாட்களில் பவுர்ணமிக்கு மட்டுமின்றி, வாரத்தின் அனைத்து நாட்களிலுமே பக்தர்கள் தொடர்ந்து செல்லக்கூடிய ஒரு வழிபாடாக மாறிவிட்டது. ஆனி மாத பவுர்ணமியை ஒட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டு மலையை சுற்றி கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்துள்ளனர்.பக்தர்களின் வசதிக்காக கிரிவல பாதையில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் ஆர்வமாக வரிசையில் நின்று அன்னதானத்தை வாங்கி சாப்பிட்டனர். அன்னதானத்தை பெறும் பக்தர்களில் அதிகமானவர்கள் உணவை வீணாக்காமல் சாப்பிட்டு விடுகின்றனர். ஆனால், ஒரு சிலர் உணவை முழுமையாக சாப்பிடாமல் கீழே வீசிவிட்டு செல்கின்றனர். கிரிவலப்பாதையிலேயே வீசிவிட்டு செல்வதால், அந்த பகுதி குப்பையாக மாறுவதோடு, நடந்து செல்லும் பக்தர்களின் கால்களிலும் மிதிபடுகிறது.
கிரிவலம் சென்ற பக்தர்கள் சாலையில் சிதறி கிடந்த அன்னதான சாப்பாட்டை கண்டு மிகுந்த மனவேதனை அடைந்தனர். அன்னதானம் வீணாவதை தடுக்க அதனை முறைப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். சித்ரா பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீப திருவிழாக்களின் போது கிரிவல பாதையில் அன்னதானம் வழங்குபவர்களுக்கு, உணவு பாதுகாப்பு துறையின் மூலம் டோக்கன்கள் வழங்கப்படும். மேலும், அன்னதானம் வழங்குபவர்களே அந்த பகுதியில் சேரும் குப்பைகளை சுத்தம் செய்துவிடுவார்கள்.
சித்ரா பவுர்ணமியை போல, ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் உணவு பாதுகாப்பு துறை மூலம் இடம் மற்றும் நேரத்தை குறிப்பிட்டு டோக்கன் வழங்க வேண்டும். அன்னதானம் வழங்குபவர்களே அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்ற விதியை அனைத்து நாட்களுக்கும் கட்டாயமாக்க வேண்டும்.