தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் நிவாரண உதவிகள்: ஐகோர்ட்டில், தமிழக அரசு உறுதி

நலவாரியத்தில் உடனடியாக பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று ஐகோர்ட்டில், தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் நிவாரண உதவிகள்: ஐகோர்ட்டில், தமிழக அரசு உறுதி
Published on

சென்னை,

தொழிலாளர்கள் நல வாரியத்தில் இதுவரை பதிவு செய்யாத அமைப்புச்சாரா தொழிலாளர்கள், ஆன்லைன் மூலம் உடனே பதிவு செய்தால் அடுத்த மாதத்திலிருந்து அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

நல வாரியங்களில் பதிவு செய்யப்படாத பிற தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவி வழங்கக் கோரி கட்டுமான தொழிலாளர் சங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் உள்ளிட்ட தொழிலாளர்கள் சங்கங்களின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், கொரோனா ஊரடங்கு சூழலில் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. பதிவு செய்யாத தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், பதிவை புதுப்பிக்காதவர்கள், பதிவு செய்யாதவர்கள் ஆகியோருக்கும் நிவாரண உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டனர்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் வாதத்தில் கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 தமிழக அரசு வழங்கியுள்ளது. பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள், பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள் என இருதரப்பினருமே இதில் பயன் பெற்றிருக்க கூடும்.

ஊரடங்கு காலத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரிய நிதியிலிருந்து ரூ.343 கோடி உறுப்பினர்களுக்கு நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத தொழிலாளர்களுக்கும் நிதியுதவி வழங்குவதாக இருந்தால், நிதியை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.

கட்டுமானத் துறையில் 50 லட்சம் பேர் இதர துறைகளில் ஒரு கோடி பேர் என மொத்தம் ஒன்றரை கோடி பேர் பதிவு செய்யப்படாத தொழிலாளர்களாக இருப்பார்கள் என்று அரசு கருதுகிறது. இதுவரை பதிவு செய்யாத அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆன்லைன் மூலம் நலவாரியத்தில் உடனே பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு அடுத்த மாதத்திலிருந்து அரசு வழங்கும் நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நாளை(வியாழக்கிழமைக்கு) தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com