

மதுரை,
திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
2021-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில் சொத்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்த ரவிட்டது. அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களுக்கு சொந்தமாக மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக் கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள சொத்துகளை முறையாக பராமரித்து பாதுகாக்கவும், மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை விரைவாக நடத்தவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மீனாட்சி அம்மன் கோவில் வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகளின் நிலை என்ன, பிரசாத சமையல் அறை எவ்வாறு செயல்படுகிறது உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு வக்கீல் ஆஜராகி, வீரவசந்தராயர் மண்டப பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. புதிய நவீன சமையலறை அமைப்பதற்கான பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் 10-ந்தேதிக்குள் பணிகள் நிறைவடைந்துவிடும். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் செப்டம்பர் மாதம் 17-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
பின்னர் மனுதாரர் ஆஜராகி, மீனாட்சி அம்மன் கோவிலின் ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவில்லை. தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் வசூலிக்கப்பட வேண்டிய தொகை வசூலிக்கப்படாமல் உள்ளது என்றார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.