அரசுப் பணிகளில் 'அவுட்சோர்சிங்' முறையை விரிவுபடுத்தும் அரசாணையை ரத்து செய்க! - எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

அரசுப் பணி என்பது வெறும் மாதச் சம்பளம் ஈட்டும் வாழ்வாதாரம் மட்டுமல்ல.
எஸ்டிபிஐ கட்சி
Published on: 

சென்னை,

அரசுப் பணிகளில் 'அவுட்சோர்சிங்' முறையை விரிவுபடுத்தும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அவுட்சோர்சிங் முறை

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளர்களை 'அவுட்சோர்சிங்' முறையில் தேர்வு செய்து வழங்குவதற்கான முதன்மை நிறுவனமாக, வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷனை நியமித்துத் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

அரசுத் துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் ஒப்பந்தப் பணி நியமன நடைமுறையை மேலும் தீவிரப்படுத்தி விரிவாக்கம் செய்யும் தமிழக அரசின் இந்நடவடிக்கை, காலங்காலமாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்ட சமூகநீதித் தத்துவத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மாபெரும் அச்சுறுத்தலாகும்.

ஏஜென்சி முறை

அரசுப் பணி என்பது வெறும் மாதச் சம்பளம் ஈட்டும் வாழ்வாதாரம் மட்டுமல்ல; சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கிச் சமூகச் சமத்துவத்தை நிலைநிறுத்தும் முதன்மையான கருவியாகும். வெளிப்படையான போட்டித் தேர்வுகள் இன்றி ஏஜென்சி முறையில் ஆட்களை எடுக்கும்போது சட்டப்பூர்வமான இடஒதுக்கீட்டுக் கொள்கை முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு, விளிம்புநிலை இளைஞர்களின் அரசுப் பணிக் கனவு அடியோடு பாழாகிறது.

இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி

இடஒதுக்கீட்டு உரிமையைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல், அரசுத் துறைகளிலேயே உழைப்புச் சுரண்டலை அதிகாரப்பூர்வமாக அரங்கேற்றும் கொடூரமான போக்கும் இந்த ஒப்பந்த முறையில் புதைந்துள்ளது. அலுவலகக் கடைநிலை ஊழியர்கள், தட்டச்சர்கள் முதல் மேலாளர்கள் வரையிலான முக்கியப் பதவிகளில் முறையான நிரந்தர நியமனங்களைத் தவிர்த்துவிட்டு, அவர்களைப் பணிப் பாதுகாப்பற்ற குத்தகைத் தொழிலாளர்களாக மாற்றுவது நடுத்தர மற்றும் அடித்தட்டுக் குடும்பங்களின் பொருளாதார எதிர்காலத்தை நிலைகுலையச் செய்யும். ஓய்வூதியம், முறையான சலுகைகள் மற்றும் பணி உறுதிப்பாடு இல்லாத நவீனக் கொத்தடிமைச் சூழலில் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுகிறது.

எனவே, அடித்தட்டு மக்களின் அதிகாரப் பரவலாக்கத்தைத் தகர்த்து உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் மூலமான ‘அவுட்சோர்சிங்’ அரசாணையைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

அரசுத் துறைகளில் உள்ள அத்தியாவசியப் பணிகளுக்குத் தேவையான பணியிடங்களை முழுமையாகக் காலிப்பணியிடங்களாக அறிவிக்க வேண்டும். மேலும், அரசுத் துறைகளில் பல்லாண்டுகளாகத் தற்காலிகப் பணியாளர்களாகவும், பகுதிநேர ஊழியர்களாகவும் மிகக் குறைந்த ஊதியத்தில் உழைத்து வரும் ஊழியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். மீதமுள்ள அனைத்துக் காலிப்பணியிடங்களையும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வெளிப்படையான தேர்வுகள் மற்றும் சட்டப்பூர்வமான இடஒதுக்கீட்டு விதிகளின்படி அரசே நேரடியாகத் தேர்வு செய்து நியமிக்க வேண்டும் எனத் தமிழக அரசை எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X