சுயநலத்திற்காக அல்ல, சுயமரியாதைக்காக ராஜினாமா; பதவி விலகிய 3 எம்.எல்.ஏ.க்கள் விளக்கம்

முதல்-அமைச்சர் விஜய் நல்ல ஆட்சியை வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார்.
சுயநலத்திற்காக அல்ல, சுயமரியாதைக்காக ராஜினாமா; பதவி விலகிய 3 எம்.எல்.ஏ.க்கள் விளக்கம்
Published on

சென்னை

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தொடர்ந்து காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் முழு ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்து விஜய் முதல்-அமைச்சராகி உள்ளார். அவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த நிகழ்வின்போது, எஸ்.பி. வேலுமணி தரப்பு அ.தி.மு.க.வினர் த.வெ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

இந்த நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகிய 3 பேர் இன்று ராஜினாமா செய்தனர். வேலுமணி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்களான அவர்கள் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தனர்.

இந்த சூழலில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறும்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா செய்ததற்கான கடிதம் சட்டசபை விதிகளின்படி முறையாக உள்ளது. அதனால் அவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்டு விட்டது என கூறினார்.

அவர்கள் 3 பேரும் இன்றிரவு பனையூரில் உள்ள த.வெ.க.வின் தலைமை அலுவலகத்திற்கு சென்று கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். இதன்பின்னர் அவர்கள் 3 பேரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, மதுராந்தகம் மரகதம் குமரவேல் அளித்த பேட்டியின்போது, நாங்கள் பதவி விலகியது ஏன்? என மக்களுக்கு விளக்க கடமைப்பட்டுள்ளோம். ராஜினாமா என்ற இந்த முடிவு சுயநலத்திற்காக அல்ல, சுயமரியாதைக்காக எடுக்கப்பட்டது.

தமிழகத்தில் தி.மு.க.வின் ஆதரவுடன் ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி முயன்றார். ஆனால், அந்த நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கவில்லை. தி.மு.க.வுடன் கூட்டணி சேர்வதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. சி.வி. சண்முகம் தலைமையில் 30 எம்.எல்.ஏ.க்கள், த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்தோம். தொகுதி மக்களின் நிலைப்பாடு மற்றும் கோரிக்கையை முன்வைத்து இந்த நிலைப்பாட்டை முன்வைத்தோம்.

ஆனால், அ.தி.மு.க.வுக்கு பழனிசாமி துரோகம் செய்து விட்டார். எங்களை பற்றி அவதூறு பரப்பினார்கள். கடந்த 2021-ம் ஆண்டில் எதிர்க்கட்சியாக இருந்தோம். அப்போது, மக்களுக்கு எங்களால் எந்த நல்ல விசயமும் செய்ய முடியாத நிலை இருந்தது. தற்போதும் அது நீடித்தது. மக்களுக்கு எங்களால் எதுவும் செய்ய முடியாமல் இருந்தது. அதனால், தொகுதி மக்களின் விருப்பத்திற்காகவே த.வெ.க. அரசை ஆதரிக்க முடிவு எடுத்தோம்.

தொகுதி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ராஜினாமா செய்தோம். முழு மனதுடன் த.வெ.க.வில் எங்களை இணைத்து கொண்டோம் என்றார். முதல்-அமைச்சர் விஜய் நல்ல ஆட்சியை வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com