தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: தமிழக நலனுக்கு எதிரானது! - நயினார் நாகேந்திரன்

அரசு தனது முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: தமிழக நலனுக்கு எதிரானது! - நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கை

தமிழக சட்டமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறைக்கு (Delimitation) எதிராகத் தீர்மானம் கொண்டு வந்துள்ள தவெக அரசின் செயல், ஜனநாயகத்தின் மாண்பினைச் சிதைக்கும் முயற்சியாகும். "ஒரு ஓட்டுக்கு ஒரு மதிப்பு" என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. மக்கள்தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப தொகுதிகள் பிரிக்கப்படும்போது தான், ஒவ்வொரு குடிமகனின் குரலும் நாடாளுமன்றத்தில் சமமான வலிமையுடன் ஒலிக்கும். இது வெறும் எல்லைகளைப் பிரிப்பது அல்ல; மக்களின் சரியான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும்.

எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, எந்த மாநிலத்திற்கும், குறிப்பாகத் தென் மாநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ள நிலையில், தவெக அரசின் இந்த எதிர்ப்பு தமிழகத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல. கண்மூடித்தனமாக இத்தகைய சீர்திருத்தங்களை எதிர்ப்பதைத் தவிர்த்து, முதல்-அமைச்சர் விஜய்யின் அரசு தனது முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com