சட்டசபையில் நாளை ‘நீட்’ தேர்வுக்கு எதிரான தீர்மானம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சட்டசபையில் நாளை ‘நீட்’ தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை முதல்-அமைச்சர் கொண்டு வருவார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சட்டசபையில் நாளை ‘நீட்’ தேர்வுக்கு எதிரான தீர்மானம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

அமைச்சர் ஆய்வு

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மருத்துவ சுகாதார அதிகாரிகள் மற்றும் டாக்டர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

பெரும்பாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு சுற்றுச்சுவர், சிமெண்டு தரை, கீழ் நிலை நீர்த்தேக்க தொட்டி, பெண் செவிலியர் தங்குமிடம், கூடுதலாக மகப்பேறு படுக்கை அறை வேண்டும் என்ற கோரிக்கைகள் முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று இந்த ஆண்டிலேயே பணிகள் செய்யப்பட உள்ளது. மிகவிரைவில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்துவதற்கான கட்டமைப்புகள் செய்யப்பட உள்ளது.

20 லட்சம் தடுப்பூசிகள்

இந்திய வரலாற்றில் தடுப்பூசி சாதனை முகாம் மூலம் நாளை (அதாவது இன்று) ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட உள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 71 லட்சமாக உள்ளது.இந்த சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 4 கோடி என்ற அளவுக்கு எட்டும். தடுப்பூசி மூலம் நமது உடலில் 97.5 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உயிரிழப்பு தடுக்கப்படும்.

சட்டசபையில் நாளை தீர்மானம்

தமிழக அரசு விரும்பாத, முதல்-அமைச்சரின் மனதுக்கு ஒப்புதல் இல்லாத நீட் தேர்வு நடைபெறுகிறது. சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளான நாளை(13-ந் தேதி) சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வருவார்.சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பி அழுத்தம் கொடுத்து நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுத்தருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், எம்.எல்.ஏ.க்கள் அரவிந்தரமேஷ், பிரபாகர் ராஜா, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com