காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

காசாவுக்காக வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், திமுக கூட்டணி தொண்டர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து அந்நாட்டு கொடியுடன் பங்கேற்றனர்.
அதில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மனித நேய சிந்தனை கொண்ட ஒவ்வொரு மனிதரும், காசாவின் இனப்படுகொலையை கண்டிக்கிறோம். பாலஸ்தீன மக்களுக்கு நமது ஆதரவை மனப்பூர்வமாக நாம் வழங்குகிறோம். காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் 11,000 பெண்கள், 17,000 குழந்தைகள், 175 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 26 ஆயிரம் குழந்தைகள் பாலஸ்தீனத்தில் பெற்றோரை இழந்திருக்கிறார்கள். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.
ஓராண்டில் காசாவின் பெரும்பகுதி அழிக்கப்பட்டுள்ளது. உணவுக்காக காத்திருந்தவர்களின் உயிர் பறிக்கப்பட்டது. உணவுப் பொருள் ஏற்றி வந்த லாரிக்காக காத்திருந்த பாலஸ்தீனர்கள் 45 பேரை சுட்டுக் கொன்றது இஸ்ரேல் ராணுவம். அது என்னுடைய இதயத்தை நொறுக்கியது. இந்த அநீதியை கண்டிக்காமல் அமைதியாக நடந்து செல்ல யாருக்காவது மனம் வருமா?
காசாவில் இஸ்ரேல் நடத்திக்கொண்டிருக்கிற தாக்குதலால், பச்சிளம் குழந்தைகள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகிறார்கள். இந்த இனப்படுகொலையை மனிதநேய சிந்தனை கொண்ட அனைவரும் கண்டிக்க வேண்டும். அதனடிப்படையில்தான் தமிழ்நாடு கண்டிக்கிறது. காசா இனப்படுகொலையை உடனே நிறுத்த வேண்டும்.
காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வர வலியுறுத்தியும், அதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வலியுறுத்தியும் வரும் 14-ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.






